Wednesday, August 5, 2009

யோசித்து... செயல்படு

குழந்தைகளே!
நாம் ஏதாவது செய்யும்போது பலபேர் பலவிதமாக பேசுவார்கள்.ஒருவருக்கு சரியென்று படுவது இன்னொருவருக்குத் தப்பாகத் தெரியலாம்.அதனால் நமக்கு எது சரியென்று தேன்றுகிறதோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.அப்படி நடந்த ஒரு வேடிக்கையைப் பாருங்கள்.

ஒரு தந்தையும் மகனும் ஒரு கழுதையை ஓட்டிக் கொண்டு கடைவீதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த ஒருவர் 'கழுதை சும்மாதானே செல்கிறது.யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே' என்றார்.
அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார்.
கொஞ்ச தூரம் போனதும் எதிரே வந்த ஒருவர்,'ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு,நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா?' எனக் கேட்டார்.
உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான்.
தந்தையும் அவ்வாறே செய்தார்.இப்படியாக இன்னும் கொஞ்ச தூரம் பயணித்த பிறகு,
இன்னொருத்தர் பார்த்து தந்தையைக் கடிந்து கொண்டார்.
'ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா?'என
தந்தையும் மகனும் ஆளாளுக்கு இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இரண்டுபேருமே ஏறிச் செல்வோம் என கழுதையிம் முதுகில் ஏறிக் கொண்டனர்.

இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர்,'அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள்.இவர்களுக்கு இரக்கமே இல்லையா'?என எள்ளி நகையாட,
மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும் கழுதையை விட்டு இறங்கியதோடு இல்லாமல்,இருவருமாகச் சேர்ந்து கழுதையைத் தூக்கி தோளில் சுமந்தபடியே நடக்கத் தொடங்கினர்.
இதைகண்டதும் அங்கிருந்தவர்கள் ' இதென்ன கூத்து! இப்படியுமா முட்டாள்கள் இருப்பார்கள் என ஓஹோ என' கூச்சலிட்டு நகைக்கவும் அரண்டு போன கழுதை கீழே குதித்து அவர்களையும் கீழே தள்ளி விட்டு ஓட்டமெடுத்தது.

இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் ஓடிப் போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர்.

எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்திபடுத்துவது என்பது இயலாத காரியம்.எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்காமல் நாமாகவே நல்லது எது கெட்டது என்பதை யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்.

1 comment:

  1. எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்திபடுத்துவது என்பது இயலாத காரியம்.எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்காமல் நாமாகவே நல்லது எது கெட்டது என்பதை யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். /
    குழந்தைகளுக்கு ஏற்ற கதை....

    ReplyDelete

netoops blog