Sunday, March 30, 2008

குட்டீஸ்களுக்கு சில பாதுகாப்புக் குறிப்புகள்



குட்டீஸ் ! கோடைகாலம் ஆரம்பிச்சுடுச்சு. நீங்களும் தேர்வுகள் எல்லாம் முடித்துவிட்டு சுட்டித்தனமா சுற்றுவீங்க இல்லையா? எப்பவும் அப்பா, அம்மா உங்களையே கவனித்துக் கொள்ளமுடியாது இல்லையா? இதோ நீங்களே பின்பற்ற உங்களுக்காக சில பாதுகாப்பு வழிமுறைகள்.

* அப்பா, அம்மா அலுவலகம் போயிருக்கும் போது நீங்கள் எங்கேயாவது வெளியே போகணும்னா தனியாக எங்கேயும் செல்லாதீர்கள். முதலிலேயே அப்பா, அம்மாவிடம் சொல்லி அவர்கள் சொல்லும் நபர்கள் கூட மட்டுமே வெளியே செல்லுங்கள். உதாரணமா மாமா, சித்தப்பா இப்படி தெரிந்தவர்கள் கூட மட்டும்தான் போகவேண்டும்.

* அப்பா, அம்மாவிடம் அனுமதி வாங்கிவிட்டு உங்கள் நண்பன் அல்லது தோழி கூட விளையாடுங்கள். வெளியே செல்லுங்கள்.

* வெளியே செல்லும் போது தெரியாத நபர்கள் தரும் பரிசுப்பொருட்கள், உணவுப் பொருட்கள், சாக்லேட், ஐஸ்க்ரீம் எதுவும் வாங்கி சாப்பிடாதீர்கள்.

* அப்பா, அம்மா அலுவலகம் போயிருக்கும் போது வீட்டில் தனியே இருக்க நேர்ந்தால் எப்பவும் கதவைப் பூட்டியே வைத்திருங்கள். யாராவது வீட்டிற்கு வந்தால் கதவைத் திறக்காமல், ஜன்னல் அல்லது வியூ மிரர் மூலம் பார்த்து வந்திருப்பவர் உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தால் மட்டும் அவரிடம் பேசவும். இல்லையெனில் பயப்படாமல் உங்களுக்குத் தெரிந்த பக்கத்து வீட்டு அங்கிள், ஆன்ட்டியை சத்தம் போட்டுக் கூப்பிட்டு விசயத்தைச் சொல்லுங்கள்.

* எந்த ஒரு பொது இடத்துக்கும் ஷாப்பிங் மால், பார்க்கிற்கு எல்லாம் தனியே செல்லாதீர்கள். உங்கள் நண்பன் அல்லது தோழியுடன் அப்பா, அம்மாவின் அனுமதியுடன் செல்லுங்கள்.

* வெளியிடங்களுக்குச் செல்லும் போது நீங்கள் நண்பன், தோழியை தவறவிட்டு விட்டதாகத் தோன்றினால் பதட்டப்படாமல் நீங்கள் ஒரு பொதுவான இடத்தில் காத்திருங்கள். நீங்களாக அவர்களைத் தேடிச்செல்ல வேண்டாம்.

* முக்கியமாக எப்பவும் அப்பா, அம்மாவின் மொபைல் போன் எண்களை வாங்கி வைத்திருங்கள். நீங்கள் ஒரு தெரியாத இடத்துக்குச் சென்று விட்டதாக உணர்ந்தால் உடனே அருகில் இருக்கும் நம்பத்தகுந்தவர்களிடம் சொல்லி உங்கள் அப்பா, அம்மாவுக்குத் தொடர்பு கொண்டு விசயத்தைச் சொன்னால் அவர்களால் கண்டிப்பாக உங்களுக்கு உதவ முடியும்.

* முன்பின் தெரியாதவர்கள் உங்கள் பெயரைச் சொல்லி அழைத்தாலோ, ஏதும் பரிசுப் பொருட்கள் தந்தாலோ 'உங்களை எனக்குத் தெரியாது' என்று சொல்லி ஏற்க மறுத்துவிடுங்கள்.

* முன்பின் தெரியாதவர்கள் கார் அருகில் உங்களை அழைத்தாலோ, உங்களைக் காரினுள் ஏறச் சொன்னாலோ போகாதீர்கள்.

* உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் தோன்றினால் 'உங்களை எனக்குத் தெரியாது' 'எனக்கு வேண்டாம்' 'நீங்கள் யார்?' என்று தைரியமாக யாரிடமும் சொல்லுங்கள்.

தைரியம்தான் எல்லாருக்கும் முக்கியம் குட்டீஸ் ! கோடைகாலத்தை இனிமையாகக் கழிப்போம் சரியா? :-)

Saturday, March 29, 2008

மழலையர் தமிழ்ப்பாடல்கள் தொகுப்பு-8


நத்தையாரே...நத்தையாரே
அத்தை வீடு பயணமோ
அத்தை வீடு போக முதுகில்
தண்ணீர் குடம் வேணுமோ
அத்தை வீடு போகும் வழியில்
தாகம் எடுக்குமே அதனால்
தண்ணீர் குடம் முதுகில்
நானும் சுமந்து போகிறேன்
காகம் ஒன்று வந்ததாம்
தாகத்தினால் தவித்ததாம்
சுற்றும் முற்றும் பார்த்ததாம்
ஜாடி ஒன்றைக் கண்டதாம்
அந்த ஜாடி அடியிலே
கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்
சிறிய சிறிய கற்களைப்
பொறுக்கிப் பொறுக்கி போட்டதாம்
தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீர குடித்ததாம்.

பச்சைக்கிளியே பறந்து வா
பாலும் சோறும் திங்க வா
பாப்பா உன்னைப் பார்த்ததும்
பாடி ஆடி சிரிக்குதே
கொய்யாப்பழமும் நான் தருவேன்
கொஞ்சி நீயும் பேச வா
நெல்லும் மணியும் நான் தருவேன்
நித்தம் நீயும் ஓடி வா

Tuesday, March 25, 2008

மழலையர் பாடல்கள் தொகுப்பு-7


கண்ணே மணியே...படிக்க வா....

கண்ணே மணியே ஓடிவா
கட்டிக் கரும்பே படிக்க வா

அழகாய் நீயும் பேசிட
அன்னை தமிழை படிக்க வா

அவசியமான தேவைக்கு
ஆங்கிலம் பாடம் படிக்க வா

கணக்காய் வாழ்த் தெரிந்து கொள்ள
கணக்குப் பாடம் படிக்க வா

சான்றோர் பெருமை அறிந்து கொள்ள
சரித்திர பாடம் படிக்க வா

பூமிப் பந்தை புரிந்து கொள்ள
பூகோள பாடம் படிக்க வா

அதிசயம் பலவும் அறிந்து கொள்ள
அறிவியல் பாடம் படிக்க வா

கலைகள் பலவும் கற்றிடவே
கணிணி பாடம் படிக்க வா

கண்ணே மணியே ஓடிவா
கட்டிக் கரும்பே படிக்க வா>>>>கண்மணி

மானாட...மயிலாட

...

கொய்யா மரக் கிளையிலே
குக்கூ பாடுது குயில் கூட்டம்

மாமரத்துக் கிளையிலே
கொஞ்சிப் பேசுது கிளிக் கூட்டம்

பச்சை பசும் புல்வெளியில்
துள்ளியோடுது மான் கூட்டம்

பூத்துக் குலுங்கும் தோட்டத்தில்
தோகைமயிலின் ஒயிலாட்டம்

அரங்கேற்றமாகுது ஆட்டம் பாட்டம்
அனுமதி இங்கே இலவசம்>>>>கண்மணி

Tuesday, March 18, 2008

மழலையர் பாடல்கள் தொகுப்பு-6

சிட்டு


சிட்டே சிட்டே பறந்து வா
சிறகை சிறகை அடித்து வா !
கொட்டிக் கிடக்கும் மணிகளை
கொத்திக் கொத்தித் தின்ன வா !

ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய் !
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய் !

உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயர செல்லணும் !
என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு !!>>>>>>>>பொன்வண்டு

சேர்ந்து செய்வோம் !



துண்டு தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன் !

துண்டு துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய் பொம்மை செய்தனள் !

வண்ணத்தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர் !
சின்னப்பையன் கண்டனர்
சேர்த்துப் பூக்கள் செய்தனர் !

சிறிய பொருளும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே !
சின்னஞ்சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே !!!>>>>>>>>பொன்வண்டு


மரம் வளர்ப்போம்


தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறதே !
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறதே !

அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வாபோல பழம் தருது !
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது !

அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போல பழுக்கிறது !
சின்னஞ்சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே !!!>>>>>>>>பொன்வண்டு

Saturday, March 15, 2008

மழலையர் தமிழ்ப்பாடல்கள் தொகுப்பு-5

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போடு
ஈயை தூர ஓட்டு!
உன்னைப் போன்ற நல்லவர்
ஊரில் எவரும் இல்லையே
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இனி இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அ'தே எனக்கு வழியாம்>>>>>>>>>>>>தமிழ்ப் பிரியன்

மழையே மழையே வா வா
மரங்கள் வளர வா வா
உலகம் செழிக்க வா வா
உழவர் மகிழ வா வா
குளங்கள் நிறைய வா வா
குடைகள் பிடிக்க வா வா
ஆறு ஓட வா வா
அடடா போட ஓடி வா>>>>>>>>>>>>தமிழ்ப் பிரியன்


1)மாங்காய் தலை முருகன்
கட்டை வண்டியில் ஏறி
சந்தை கடை சென்றான்
விதவிதமாய் கடைகள்
சந்தையிலே கண்டான்
லட்டு கடைக்குச் சென்று
லட்டு வேண்டும் என்றான்
லட்டு கேட்ட பையா
துட்டு எங்கே என்றான்
மாங்காய்தலை முருகன்
துட்டு இல்லை என்றான்
லட்டு மிட்டாய்காரன்
லட்டும் இல்லை என்றான்>>>>>>>>>>நானானி>>>>...

2)சின்ன விஜயராணி செல்ல விஜயராணி
வடைக்காகப் பாடுகிறாள்
வானம் பார்த்து சிரிக்கிறாள்
மிளகாய்த் துண்டு சிறு துண்டு
நறுக் என்று கடித்தாள்
தேம்பித்தேம்பி அழுகிறாள்
-----------------------
---------------[கோடிட்ட இடங்களை நிரப்புங்க பார்ப்போம்]
>>>>>>>>>நானானி

Thursday, March 13, 2008

மழலையர் தமிழ்ப்பாடல்கள் தொகுப்பு-4

1) அப்பாக்குட்டி மகன் சுப்பாக்குட்டி
சுப்பாக்குட்டி மகன் சுண்டெலியாம்
சுண்டெலி ராஜனுக்கு கலியாணமாம்
கொக்கைக் கூப்பிடுங்கள் பந்தல் போட
குருவியை கூப்பிடுங்கள் பூப்போட
தவளையை கூப்பிடுங்கள் தாரை ஊத
அப்பாக்குட்டி மகன் சுப்பாக்குட்டி
சுப்பாக்குட்டி மகன் சுண்டெலியாம்.>>>>>>>>>>>.நானானி



2) ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பல வாத்துகள் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பாத்தாலும் குவாக் குவாக்
இங்கே பாத்தாலும் குவாக் குவாக்

ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பல பூனைகள் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பாத்தாலும் மியாவ் மியாவ்
இங்கே பாத்தாலும் மியாவ் மியாவ்

ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடிப்பக்கத்திலே
அங்கே பல நாய்கள் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பாத்தாலும் லொள் லொள்
இங்கே பாத்தாலும் லொள் லொள்

ராமசாமிக்கு தோட்டம் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பல மாடுகள் உண்டு ஆவடிப் பக்கத்திலே
அங்கே பாத்தாலும் ம்மா ம்மா
இங்கே பாத்தாலும் ம்மா ம்மா>>>>>>>>>>>.நானானி


சின்னச்சின்ன அபிநயனங்களோடு பாடினால் நல்லாயிருக்கும்.


ஆறு மாதக் குழந்தைக்கு கைதட்ட சொல்லிக்கொடுக்கும் பாட்டு

3) சப்பாணி கொட்டுவானாம்
தயிருஞ்சோறும் திம்பானாம்
அப்பஞ்சுட்டா திம்பானாம்
அவலிடிச்சா மொக்குவானாம்
மொக்குவானாம் மொக்குவானாம்>>>>>>>>>>>.நானானி


கண்ணே மணியே முத்தம் தா
கட்டிக்கரும்பே முத்தம் தா
கண்ணே மணியே முத்தம் தா
கட்டிக்கரும்பே முத்தம் தா
வண்ணக் கிளியே முத்தம் தான்
வாசக் கொழுந்தே முத்தம் தா
வண்ணக் கிளியே முத்தம் தான்
வாசக் கொழுந்தே முத்தம் தா
மானே தேனே முத்தம் தா
மடியில் வந்து முத்தம் தா>>>>>>>>>>>>>>காட்டாறு

கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு
பாடும் குயிலே கைவீசு
பைய போகலாம் கைவீசு
பழத்தை வாங்கலாம் கைவீசு>>>>>>>>>>>>>>காட்டாறு

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்குப் பூ கொண்டு வா
கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா
கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டு வா>>>>>>>>>>>>>>காட்டாறு

மழலையர் தமிழ்ப் பாடல்கள் தொகுப்பு-3

மழலைச் செல்வங்களுக்கு தரமான தமிழ்ச்சொற்களை கொண்ட கருத்துடைய பாடல்களை பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு நல்ல உச்சரிப்பும் மொழி உணர்வும் கிடைக்கப்பெறுவார்கள். கீழ்க்கண்ட பாடல்களை எழுதியவர்களின் ஆசையும் அதுவே. முயற்சித்து பாருங்களேன்.



1.
சேவலைப் பார் சேவலைப் பார்
சிப்பாயைப் போல - அது
கூவுது பார் கூவுது பார்
கொம்பொலி போல.

வெற்றி நடை போடுது பார்
வீரனைப் போல - போரில்
சுற்றி வந்து அடிக்குது பார்
சூரனைப் போல.

வாலையாட்டும் வண்ணத்தைப் பார்
வானவில் போல - அதி
காலையிலே எழுப்பிடும் பார்
காவலன் போல.
(துரை. தில்லான்)


2.
கசட தபற வல்லினம்
கசக்கும் வேம்பு மருந்தினம்
ஙஞண நமன மெல்லினம்
ங ப்போல் உறவைக் காக்கணும்
யரல வழள இடையினம்
இரவில் உணவு குறையணும்
தமிழில் மெய்கள் மூவினம்
தமிழர் எல்லாம் ஓரினம்.
(வெங்கடேச பாரதி)


3.
அம்மா கண்ணே அருகேவா
அழகுச் சிலையே அருகேவா
அப்பா செல்லம் அருகேவா
அழகுக் கிளியே அருகேவா

பட்டே சிட்டே அருகேவா
பழமே சுவையே அருகேவா
மொட்டே மலரே அருகேவா
முந்திரிச் சுவையே அருகேவா
(தமிழோவியன்)


4.
புன்னகை என்றும் புரிந்திடு
பொய்களை எதிர்த்து வென்றிடு
அனைத்து மொழியும் கற்றிடு
அமுதத் தமிழில் பேசிடு
கூடா நட்பை வெறுத்திடு
கூடி நீயும் வாழ்ந்திடு
விடாமல் முயற்சி செய்திடு
வெற்றிக் கனியைப் பறித்திடு

பள்ளி பள்ளி பள்ளி
பாடம் படிக்கப் பள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
விளையாடுவோம் துள்ளி
வெள்ளி வெள்ளி வெள்ளி
அக்கா கொலுசு வெள்ளி
அல்லி அல்லி அல்லி
அழகு மலரே அல்லி.
(ச.சண்முக சிதம்பரம்)


5.
பெற்றோர் காத்தல் நம்கடனே
பெரிதாய்க் கற்றல் நம்கடனே
உற்றார் போற்ற வாழ்ந்திடுதல்
உலகின் முதன்மைக் கடனாகும்.

வெற்றுப் பேச்சில் காலந்தான்
வீணாய்ப் போகும் அதனாலே
குற்றம் இல்லா வாழ்வுதனைக்
குறிக்கோளுடனே வாழ்ந்திடுவோம்.
(இலக்கியன்)



6.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
செல்லப் பிள்ளை நான்
அண்ணணுக்கும் தம்பிக்குந்தான்
அன்புப் பிள்ளை நான்
ஆசிரியர் அனைவருக்கும்
ஆசைப் பிள்ளை நான்
வாழ்வில் ஓங்கி உயர்ந்திடவே
படிக்கும் பிள்ளை நான்.
(அரி.இல.தமிழடியான்)


7.
கோழி நல்ல கோழி
முட்டை யிடும் கோழி
குள்ள மான கோழி
குஞ்சைக் காக்கும் கோழி

பருந்து குஞ்சைத் தூக்கிட
பறந்து கிட்டே வந்திடப்
பாய்ந்து விரட்டும் கோழி
தாய்மை மிக்க கோழி
(மி. அமலன்)


8.
ஓடிப் பிடித்து விளையாடி
ஒன்றாய்ச் சேர்ந்து பழகிடுவோம்
கூடிப் பேசி மகிழ்ந்திடுவோம்
குணத்தில் சிறந்து விளங்கிடுவோம்

மானைப் போலே துள்ளிடுவோம்
மயிலைப் போலே ஆடிடுவோம்
தேனைப் போலே இனித்திடுவோம்
சேர்ந்தே கூடி மகிழ்ந்திடுவோம்
(சாப்டூர் சதுரகிரியான்)


9.
சிட்டுக் குருவி வானிலே
சிறகடித்துப் பறக்குது
கொட்டும் அருவி மலையிலே
சலசலத்துக் கொட்டுது

குருவிபோல நாமுமே
கூடிவாழப் பழகுவோம்
அருவி போல நாமுமே
அனைவர் போற்ற வாழுவோம்.
(ஆதி.நாராயணமூர்த்தி)



10.
வெள்ளைப் பூனை வந்தது
வெறித்துப் பார்த்து நடந்தது
வீட்டில் எலியைக் கண்டது
விரட்டிக் கொண்டு சென்றது

ஓடி எலியும் ஓட்டையின்
உள்ளே சென்று மறைந்தது
விரட்டும் பூனை நின்றது
மியாவ் மியாவ் என்றது.
(அ.பக்கிரிசாமி)



11.
அன்பே அமுதே எழுந்திடு
அன்னைத் தமிழை படித்திடு
அறிவாய் நீயும் வளர்ந்திடு
அறியாமை மீது போர்த்தொடு
உடும்பாய்க் கொள்கை பிடித்திடு
உயர்வு தாழ்வு சமனிடு
உரிமை மீட்கத் துணிந்திடு
உண்மை யாக வாழ்ந்திடு.

காய்ச்சிய நீரைக் குடி குடி
கரும்பை நன்றாய்க் கடி கடி
தாய்மொழிக் கல்வி படி படி
தடையாம் சுவரை இடி இடி
காற்றில் மாசு வடி வடி
மண்ணில் கழிவு துடி துடி
சாதிப் பாம்பை அடி அடி
துணிந்து செயலை முடி முடி.

கதிரவன் வந்தான் எழுந்திடு
கண்ணை நன்றாய்த் திறந்திடு
காலைக் கடனை முடித்திடு
கடமை செய்யத் துணிந்திடு
கல்விக் கரும்பைக் கடித்திடு
கசடை நீக்கிப் படித்திடு
கலைகள் அனைத்தும் கற்றிடு
காரிருள் நீக்கி வென்றிடு.
(புதுவை தமிழ்நெஞ்சன்)

Tuesday, March 11, 2008

மழலையர் தமிழிப்பாடல்கள் தொகுப்பு-2 [குழு விளையாட்டு]

குழுப் பாடல்கள்:

சிறுமிகள் இரண்டு குழுவாக இணைந்து ஓடி விளையாடுவார். ஒரு அணியில் உள்ள ஒருவரை மற்றொரு அணியைச் சேர்ந்த சிறுமி தொட்டு ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். இரண்டு தரப்பையும் சேர்ந்த இரு சிறுமிகளைத் தேர்ந்தெப்பதற்க்கானப் பாட்டு தான் இது. ஒரு அணியில் அனைவருக்கும் பூக்களின் பெயர்களைக் கொண்டு பேர் இடப்படும். நடுவருக்கும் இது தெரியும். பின்னர் இரு அணியினரும் எதிரெதிரே நின்று கொண்டு தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு கோரசாகப் பாடுவார்கள்.

முதல் அணி : பூப்பறிக்க வருகிறோம்! பூப்பறிக்க வருகிறோம்!

இரண் அணி : எந்த மாதம் வருவீர்கள்! எந்த மாதம் வருவீர்கள்!

முதல் அணி : ஆடி மாதம் வருகிறோம்!ஆடி மாதம் வருகிறோம்!

இரண் அணி :எந்தப் பூவைப் பறிப்பீர்கள்!எந்தப் பூவைப் பறிப்பீர்கள்!

முதல் அணி : மல்லிகைப் பூவைப் பறிக்கிறோம்!
மல்லிகைப் பூவைப் பறிக்கிறோம்!

இரண் அணி : யாரை விட்டு அனுப்புவீர்கள்!யாரை விட்டு அனுப்புவீர்கள்!

முதல் அணி : அமுதாவை விட்டு அனுப்புகிறோம்!அமுதாவை விட்டு அனுப்புகிறோம்!

இதில் பூவின் பெயரும், சிறுமியின் பெயரும் மட்டும் மாறும்.******தமிழ்ப் பிரியன்

***************************************************************
எண்களின் வரிசை தரும் குழுப் பாடல்கள்:

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண் இரண்டு
மூன்று முக்காலிக்குக் கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்த் ஒருகை விரல் ஐந்து
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானியம் வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து>>>>>>>>>>>>>>>கயல்விழி முத்துலஷ்மி

**************************************************************
இரண்டு பிள்ளைகள் நேர் எதிராக நின்று கொண்டு கைகளைக் கோர்த்து கூரை போல் அமைக்க மற்ற்வர்கள் வரிசையாக ஒவ்வொருவராக பாடிக் கொண்டே உள்ளே நுழைந்து இருவரையும் சுற்றி வர கடைசியாக பத்து சொல்லும் போது உள்ளே நுழைபவர் அவுட் ஆகி விடுவார்.

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சாம்
மூணு குடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்துச்சாம்
நாலு குடம் தண்ணி ஊத்தி நாலே பூ பூத்துச்சாம்
அஞ்சு குடம் தண்ணி ஊத்தி அஞ்சே பூ பூத்துச்சாம்
ஆறு குடம் தண்ணி ஊத்தி ஆறே பூ பூத்துச்சாம்
ஏழு குடம் தண்ணி ஊத்தி ஏழே பூ பூத்துச்சாம்
எட்டு குடம் தண்ணி ஊத்தி எட்டே பூ பூத்துச்சாம்
ஒன்பது குடம் தண்ணி ஊத்தி ஒன்பதே பூ பூத்துச்சாம்
பத்து குடம் தண்ணி ஊத்தி பத்தே பூ பூத்துச்சாம்
****காட்டாறு

********************************************************************
வேடிக்கைப் பாடல்கள்:

பலூனம்மா பாலூன்
கலர்க் கலரா இருக்குது..
கரடி போல ஒண்ணு
காக்கா போல ஒண்ணு

காத்தாடி போல ஒண்ணு
கத்திரி போல ஒண்ணு

காசு போட்டு வாங்கலாம்கூச்சல் போட்டு ஓடலாம்

டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா
கோபம் கொள்ளாதே
அப்பா வர நேர மாச்சு வம்பு பண்ணாதே>>>>>>>>>>>>வல்லியம்மா


******************************************************************

பெயரை மறந்த ஈ..

ஒரு ஈ தன் பெயரை மறந்து விட்டதாம் ஒவ்வொருவராய்ப் போய்க் கேட்கிறதாம்.ஈ யாக ஒரு பிள்ளை தன்னை பாவித்து அடுத்தவரிடம் கேட்கும் விளையாட்டு:

கொழு கொழு கன்றே கொழு கொழு கன்றே
என் பேர் என்ன??
எனக்குத் தெரியாதே......என் அம்மாவிடம் கேள்
கன்றை ஈன்ற பசுவே பசுவே
என் பேர் என்ன??
எனக்குத் தெரியாதே.....மாட்டுக்காரனிடம் கேள்
மாடு மேய்க்கும் சிறுவா மாடு மேய்க்கும் சிறுவா
என் பேர் என்ன??
எனக்குத் தெரியாதே....பச்சைப் புல்லிடம் கேள்
பச்சைப் புல்லே பச்சைப் புல்லே
என் பேர் என்ன??
எனக்குத் தெரியாதே....அதோ அந்தக் குதிரையைக் கேள்
புல்லைத் தின்னும் குதிரையே குதிரையே
என் பேர் என்ன??
குதிரை ஈ..ஈ...ஈ...எனக் கனைக்க
ஆஹா..நான் ஈ...என் பேர்...ஈ...என சந்தோஷப் பட்டதாம்******வல்லியம்மா /கண்மணி


அந்த ஈ பாட்டு முழுசும் இப்படியும் வரும்.

கொழு கொழு கன்றே
கன்றின் தாயே
கன்றை மேக்கும் இடையா
இடையன் கை கோலே
கோலே கொடிமரமே
கொடிமரத்துக் கொக்கே
கொக்கும் வாழும் குளமே
குளத்திலிருக்கும் மீனே
மீனைப்பிடிக்கும் வலையா
வலையன் கை சட்டியே
சட்டி செய்யும் குயவா
குயவன் கை மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத்தின்னும் குதிரையே
என் பேரென்ன??
..... நல்லாருக்கா>>>>>>>>>>>>>>>.கிருத்திகா



*****************************************************


குத்தடி குத்தடி சைலக்கா
குனிந்து குத்தடி சைலக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கு
பைய வேணா பாத்துக்கோ
பணத்த வாங்கிப் போட்டுக்கோ
சில்லறயை மாத்திக்கோ
சிலுக்கு சட்டை போட்டுக்கோ
ஜில்ஜில் ஆடிக்கோ>>>>>>>>>>>>>>>>.நானானி

Friday, March 7, 2008

மழலையர் தமிழ்ப் பாடல்கள் தொகுப்பு--1 [விலங்குகள்]


டக்குடக்கு கடிகாரம்
தட்டு நிறைய பணியாரம்
குட்டிகுட்டி சுண்டெலிகள்
எட்டிஎட்டிப் பார்த்தனவே
டண்டண் என்றது கடிகாரம்
தாவி வந்தது கரும்பூனை
கண்டு மிரண்ட சுண்டெலிகள்
காற்றாய் பறந்து மறைந்தனவே******நானானி



குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் வந்ததாம்
பாவம் அதற்கு பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்*******நிஜமா நல்லவன்



அணிலே அணிலே ஓடிவா!
அழகிய அணிலே ஓடிவா!
கொய்யா மரம் ஏறிவா!
குண்டு பழம் கொண்டுவா!
பாதி பழம் உன்னிடம்
மீதி பழம் என்னிடம்!
கொறித்து கொறித்து தின்னலாம்********ஆஷிஷ் அம்ருதா



வெள்ளை நிற முயலக்கா
வெளியே வந்து பாரக்கா
சினஞ்சிறு கைகளால்செடியைத் தின்னும் முயலக்கா
அங்கும் இங்கும் ஓடினாலும்
அழகாய் தோன்றும் முயலக்கா**********நிஜமா நல்லவன்



கோழி கிளறினால் வேலி போடலாம்
வாடா கண்ணா வா!
வேலியை ஆடு தாண்டிவிடுமே
போடா வரமாட்டேன்!

கீரை விதைப்போம் கீரை விதைப்போம்
வாடா கண்ணா வா!
கீரை வளரத் தண்ணீர் வேண்டுமே
போடா வரமாட்டேன்!

கேணி நீரை இறத்துக் கொள்ளலாம்
வாடா கண்ணா வா!
கீரை வளர்ந்தபின் என்ன செய்வது?
போடா வரமாட்டேன்!

கீழைத் தெருவில் விற்றுவிடலாம்
வாடா கண்ணா வா!
விற்ற பணத்தை என்ன செய்வது?
போடா வரமாட்டேன்!

வீணாக்காமல் வங்கியில் சேர்ப்போம்
வாடா கண்ணா வா!
வீடும் நாடும் வாழ்த்த வாழ்வோம்
வா வா அண்ணா வா!*********************பாசமலர்



தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
அங்கே துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு
உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு
பாலை நன்றாய் குடிக்குது கன்றுக்குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு
மடிமுட்டி குடிக்குது கன்றுக்குட்டி*********நிஜமா நல்லவன்



யானை யானை அழகர் யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
கட்டிக்கரும்பைக் கடிக்கும் யானை
காவேரித்தண்ணீரைக் கலக்கும் யானை***********பொன்வண்டு

Sunday, March 2, 2008

குட்டீஸ்:பத்தோடு பதினொன்றா நீங்கள்?

குட்டீஸ்!

குட்டீஸ் முன்பு சுலபமாய் 9 ஆல் பெருக்கச் சொல்லிக் கொடுத்தேன்.

இப்போது இன்னும் சுலபமாய் 11 ஆல் பெருக்க சொல்லித்தரப் போகிறேன்.

ஒற்றை இலக்க எண்களைச் சுலபமாய் 11ஆல் பெருக்க முடியும்.

இரட்டை இலக்க எண்களை எப்படி 11 ஆல் பெருக்குவது?:

உதாரணமாக 12x11=132 இதில் அந்த இரண்டு எண்களையும்

கூட்டிக் கொள்ளவும் 1+2=3 இந்த கூட்டுத்தொகையை அப்படியே

இரண்டுக்கும் நடுவில் சேர்க்க வேண்டியதுதான். 1 3 2 சரியா?

இன்னொரு உதாரணம்: 56x11=616 [5+6=11] இதை இரண்டுக்கும் நடுவில் எழுதினால்
5+1 1 6 =6 1 6 [கூட்டுத்தொகை இரண்டு இலக்கத்தில் வரும்போது பதின்ம எண்ணை [செகண்ட் டிஜிட்] முதல் எண்ணுடன் கூட்டவும்.


இரண்டுக்கு மேற்பட்ட இலக்கங்களைக் கொண்ட எண்களை 11 ஆல் பெருக்குதல்:

உதாராணமாக 34781x11 = 382591

வலது புறத்திலிருந்து ஆரம்பித்து முதல் இலக்க எண்ணை அப்படியே எழுதவும்.1+0=1
அடுத்து முன்னால் உள்ள எண்ணுடன் அடுத்த எண்ணைக் கூட்டி எழுதியபடி செல்லவும்.

1+0=1
1+8=9
8++7=15
7+4=11
4+3=7
3+0=3 3 7 11 15 9 1= 382591 [பதின்ம எண்ணை அடுத்த எண்ணுடன் கூட்டவும்]

இன்னொரு உதாரணம் 7946732x11= 87414052
2+0=2
3+2=5
7+3=10
6+7=13
4+6=10
9+4=13
7+9=16
7+0=7 2 5 10 13 10 13 16 7 =87414052


உங்க நண்பர்களிடம் எத்தனை பெரிய எண்களையும் நொடியில் 11 ஆல் பெருக்கிக் காட்டி அசத்துங்க.இனி நீங்க பத்தோடு பதினொன்று இல்லை.சாமர்த்தியசாலின்னு நிரூபிங்க.
மீண்டும் உங்களை சந்திக்கும் வரை வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.
netoops blog