வெள்ளி, 23 மே, 2008

அத்திரி பாச்சா கொழுக்கட்டை

குட்டீஸ்
நல்லா இருக்கீங்களா?விடுமுறையெல்லாம் இனிமையாக கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.நானும் அதிக வேலை காரணமாக பதிவு போட முடியலை.
இதோ ஒரு குட்டிக் கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்...

ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.அவனுக்கு பக்கத்து ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து வைத்தனர்.
வியாபார விஷயமாக அவன் வெளியூர் சென்று விட்டதால் திருமணம் முடிந்து பலநாள் ஆகியும் அவனால் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போக இயலவில்லை.

பின்னர் ஒருமுறை அவன் வியாபாரம் செய்ய சென்ற ஊரிலிருந்து மிக பக்கமாக அவனுடைய மாமியார் வீடு இருந்ததால் மனைவி இல்லாமல் தான் மட்டும் தனியாக அங்கு போயிருந்தான்.
வெகுநாள் கழித்து விருந்துக்கு வந்த மருமகனை மாமியாரும் நன்கு உபசரித்தாள்.வேளைக்கு ஒரு பலகாரம் செய்து அசத்தினாள்.

அதில் மருமகனுக்கு மாமியார் செய்து கொடுத்த கொழுக்கட்டையே மிகவும் பிடித்தமானதாக இருந்தது.மேலும் மேலும் வேண்டுமென்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவன் இதுவரை தன் மனைவி அதைச் செய்து தந்ததில்லை என்று அதன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
விருந்துக்குப் பிறகு கிளம்பியவன் மறந்து விடக்கூடாது என அந்த பலகாரத்தின் பெயரையே மனனம் செய்து உச்சரித்தபடியே நடந்தான்.

வழியில் குறுக்காக ஒரு வாய்க்கால் இருந்தது.அதைத் தாண்டிச் செல்லும் நோக்கில் குதித்தவன் சட்டென்று 'அத்திரி பாச்சா' என்றான்.
மிகப் பிரயத்தனப் பட்டு கடினமான ஒரு வேலையைச் செய்பவர்கள் இப்படி ஏதாவது வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.அது போல இவன் வாய்க்காலைத் தாண்டும் போது 'அத்திரி பாச்சா'எனக் கூற பிறகு கொழுக்கட்டைப் பேரை மறந்து அத்திரி பாச்சா எனக் கூறிக் கொண்டே வீட்டுக்குச் சென்றான்.

மனைவியிடம் மாமியார் செய்து தந்த பலகாரத்தின் சுவையை சிலாகித்துக் கூறியவன் எனக்கு அதே போல அத்திரி பாச்சா செய்து கொடு என்றான்.
மனைவி குழம்பிப் போனாள்.இதென்ன புதுப் பேராக உள்ளது.இப்படியொரு பலகாரம் எனக்குத் தெரியாதே என்றாள்.

கணவன் திரும்பத் திரும்ப அந்தப் பேரைச் சொல்ல மனைவி தெரியாது என்றே கூற கோபமான அவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைய கன்னம் வீங்கிப் போனது.

இதைப் பார்த்த அவன் அம்மா அடப்பாவி இப்படி அடித்து கன்னம் கொழுக்கட்டை போல் வீங்கி விட்டதே என
அவன் சந்தோஷத்தில் குதித்தபடி அதேதான்....அந்தப் பேர்தான் கொழுக்கட்டை ...கொழுக்கட்டை என்று குதித்தான்.
இவ்வளவு நேரமும் கணவன் கொழுக்கட்டை என்பதைத்தான் பேரை மறந்து அத்திரி பாச்சா என்றான் என்பதை புரிந்து கொண்டவள் அவனுக்கு நிறையச் செய்து கொடுத்தாள்...

குட்டீஸ் உங்களுக்கும் [அத்திரி பாச்சா] கொழுக்கட்டை பிடிக்கும் தானே?

7 கருத்துகள்:

  1. நானும் ஒரு கதை சொல்றேன். ஒருத்தன் தன்னோட மாமியார் வீட்டுக்கு போனானாம். அங்க மாமியார் உரலில் எள் இடித்து சூப்பரா எள் உருண்டை செய்து கொடுத்தாங்களாம். ஆனா மருமகன் பந்தா பண்ணிக்கிட்டு கொஞ்சமா சாப்பிட்டார். ஆனா ருசி அவரை விடலை. மாமியாரிடம் கேட்கவும் ஈகோ தடுக்குது. அதனால அந்த உரலில் தலையை விட்டு மீதி இருந்ததை சாப்பிட்டாராம். ஆனா அவரோட துரதிர்ஷ்டம் தலை உரலில் மாட்டிக்கிச்சு. மருமகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவங்க எல்லாம் வந்திட்டாங்க. அப்ப அந்த மாமியார் சொன்னாங்களாம் “ அருமை மருமகன் தலை போனாலும் பரவாயில்லை. ஆதி காலத்து உரலுக்கு எந்த சேதமும் ஆகக் கூடாது”

    பதிலளிநீக்கு
  2. 1.தமிழ்பிரியன்
    2.தமிழ்பிரியன்
    3.பொன்வண்டு

    இவுகளெல்லாம் குட்டீஸ்களா?

    அடக்கடவுளே!

    என்ன கொடுமை டீச்சர்!

    இனி நீங்க எங்களுக்கு கதை சொல்லணும்னா தனியா பிங்க் பண்ணுங்க இல்லாட்டி இந்த பெருசுங்களெல்லாம் வந்து எங்களை டிஸ்டர்ப் பண்ணிடும் :)))))))))))

    பதிலளிநீக்கு
  3. எங்க அம்மா எனக்கு சொல்லி இருக்காங்களே இந்த கதை.. எனக்கு பிடிக்கும் கொழுக்கட்டை.. எங்க ஆச்சி நல்லா செய்து கொடுப்பாங்க .. :)

    பதிலளிநீக்கு
  4. எங்க வீட்டுக்கு வரும் ஓர் ஆச்சி இந்தக் கதையை சொல்லியிருக்கிறார்கள்.
    சின்னவயதில் கேட்ட 'கதை ரீப்ளே' ஆனதில் கொசுவத்தி ஏத்திட்டீங்க.

    பதிலளிநீக்கு
  5. // சின்னவயதில் கேட்ட 'கதை ரீப்ளே' ஆனதில் கொசுவத்தி ஏத்திட்டீங்க. //

    ha...ha...ha..!

    பதிலளிநீக்கு

netoops blog