வியாழன், 13 மார்ச், 2008

மழலையர் தமிழ்ப் பாடல்கள் தொகுப்பு-3

மழலைச் செல்வங்களுக்கு தரமான தமிழ்ச்சொற்களை கொண்ட கருத்துடைய பாடல்களை பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு நல்ல உச்சரிப்பும் மொழி உணர்வும் கிடைக்கப்பெறுவார்கள். கீழ்க்கண்ட பாடல்களை எழுதியவர்களின் ஆசையும் அதுவே. முயற்சித்து பாருங்களேன்.



1.
சேவலைப் பார் சேவலைப் பார்
சிப்பாயைப் போல - அது
கூவுது பார் கூவுது பார்
கொம்பொலி போல.

வெற்றி நடை போடுது பார்
வீரனைப் போல - போரில்
சுற்றி வந்து அடிக்குது பார்
சூரனைப் போல.

வாலையாட்டும் வண்ணத்தைப் பார்
வானவில் போல - அதி
காலையிலே எழுப்பிடும் பார்
காவலன் போல.
(துரை. தில்லான்)


2.
கசட தபற வல்லினம்
கசக்கும் வேம்பு மருந்தினம்
ஙஞண நமன மெல்லினம்
ங ப்போல் உறவைக் காக்கணும்
யரல வழள இடையினம்
இரவில் உணவு குறையணும்
தமிழில் மெய்கள் மூவினம்
தமிழர் எல்லாம் ஓரினம்.
(வெங்கடேச பாரதி)


3.
அம்மா கண்ணே அருகேவா
அழகுச் சிலையே அருகேவா
அப்பா செல்லம் அருகேவா
அழகுக் கிளியே அருகேவா

பட்டே சிட்டே அருகேவா
பழமே சுவையே அருகேவா
மொட்டே மலரே அருகேவா
முந்திரிச் சுவையே அருகேவா
(தமிழோவியன்)


4.
புன்னகை என்றும் புரிந்திடு
பொய்களை எதிர்த்து வென்றிடு
அனைத்து மொழியும் கற்றிடு
அமுதத் தமிழில் பேசிடு
கூடா நட்பை வெறுத்திடு
கூடி நீயும் வாழ்ந்திடு
விடாமல் முயற்சி செய்திடு
வெற்றிக் கனியைப் பறித்திடு

பள்ளி பள்ளி பள்ளி
பாடம் படிக்கப் பள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
விளையாடுவோம் துள்ளி
வெள்ளி வெள்ளி வெள்ளி
அக்கா கொலுசு வெள்ளி
அல்லி அல்லி அல்லி
அழகு மலரே அல்லி.
(ச.சண்முக சிதம்பரம்)


5.
பெற்றோர் காத்தல் நம்கடனே
பெரிதாய்க் கற்றல் நம்கடனே
உற்றார் போற்ற வாழ்ந்திடுதல்
உலகின் முதன்மைக் கடனாகும்.

வெற்றுப் பேச்சில் காலந்தான்
வீணாய்ப் போகும் அதனாலே
குற்றம் இல்லா வாழ்வுதனைக்
குறிக்கோளுடனே வாழ்ந்திடுவோம்.
(இலக்கியன்)



6.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
செல்லப் பிள்ளை நான்
அண்ணணுக்கும் தம்பிக்குந்தான்
அன்புப் பிள்ளை நான்
ஆசிரியர் அனைவருக்கும்
ஆசைப் பிள்ளை நான்
வாழ்வில் ஓங்கி உயர்ந்திடவே
படிக்கும் பிள்ளை நான்.
(அரி.இல.தமிழடியான்)


7.
கோழி நல்ல கோழி
முட்டை யிடும் கோழி
குள்ள மான கோழி
குஞ்சைக் காக்கும் கோழி

பருந்து குஞ்சைத் தூக்கிட
பறந்து கிட்டே வந்திடப்
பாய்ந்து விரட்டும் கோழி
தாய்மை மிக்க கோழி
(மி. அமலன்)


8.
ஓடிப் பிடித்து விளையாடி
ஒன்றாய்ச் சேர்ந்து பழகிடுவோம்
கூடிப் பேசி மகிழ்ந்திடுவோம்
குணத்தில் சிறந்து விளங்கிடுவோம்

மானைப் போலே துள்ளிடுவோம்
மயிலைப் போலே ஆடிடுவோம்
தேனைப் போலே இனித்திடுவோம்
சேர்ந்தே கூடி மகிழ்ந்திடுவோம்
(சாப்டூர் சதுரகிரியான்)


9.
சிட்டுக் குருவி வானிலே
சிறகடித்துப் பறக்குது
கொட்டும் அருவி மலையிலே
சலசலத்துக் கொட்டுது

குருவிபோல நாமுமே
கூடிவாழப் பழகுவோம்
அருவி போல நாமுமே
அனைவர் போற்ற வாழுவோம்.
(ஆதி.நாராயணமூர்த்தி)



10.
வெள்ளைப் பூனை வந்தது
வெறித்துப் பார்த்து நடந்தது
வீட்டில் எலியைக் கண்டது
விரட்டிக் கொண்டு சென்றது

ஓடி எலியும் ஓட்டையின்
உள்ளே சென்று மறைந்தது
விரட்டும் பூனை நின்றது
மியாவ் மியாவ் என்றது.
(அ.பக்கிரிசாமி)



11.
அன்பே அமுதே எழுந்திடு
அன்னைத் தமிழை படித்திடு
அறிவாய் நீயும் வளர்ந்திடு
அறியாமை மீது போர்த்தொடு
உடும்பாய்க் கொள்கை பிடித்திடு
உயர்வு தாழ்வு சமனிடு
உரிமை மீட்கத் துணிந்திடு
உண்மை யாக வாழ்ந்திடு.

காய்ச்சிய நீரைக் குடி குடி
கரும்பை நன்றாய்க் கடி கடி
தாய்மொழிக் கல்வி படி படி
தடையாம் சுவரை இடி இடி
காற்றில் மாசு வடி வடி
மண்ணில் கழிவு துடி துடி
சாதிப் பாம்பை அடி அடி
துணிந்து செயலை முடி முடி.

கதிரவன் வந்தான் எழுந்திடு
கண்ணை நன்றாய்த் திறந்திடு
காலைக் கடனை முடித்திடு
கடமை செய்யத் துணிந்திடு
கல்விக் கரும்பைக் கடித்திடு
கசடை நீக்கிப் படித்திடு
கலைகள் அனைத்தும் கற்றிடு
காரிருள் நீக்கி வென்றிடு.
(புதுவை தமிழ்நெஞ்சன்)

8 கருத்துகள்:

  1. பாடல்கள் எல்லாம் நல்லாயிருக்கு..கொஞ்சம் நல்ல தமிழாயிமிருக்கு.

    என்னோட அடுத்த பங்களிப்பு பதிவிட்டிருக்கிறேன். பார்த்து சொல்லவும்.
    http://www.9-west.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. மீ த பர்ஸ்டா? அரும்புகளில் நல்லவனுக்கு நல்லவன்,..... மன்னிக்கவும்... நிஜமா நல்லவனுக்கு வந்தனம்

    பதிலளிநீக்கு
  3. பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. எங்கிருந்து பிடித்தீர்கள்?

    \\\ங ப்போல் உறவைக் காக்கணும்
    பொரிதாய்க் கற்றல் நம்கடனே
    முட்டை யிடும் கோழி
    குள்ள மான கோழி\\\
    ?????

    பதிலளிநீக்கு
  4. தமிழ் பாடல்கள் பாகம்-3ம் பதிவிட்டிருக்கிறேன். பிடிச்சிருக்கா பாருங்கள்.
    http://www.9-west.blogspot.com/

    பதிலளிநீக்கு
  5. வலைப்பூ தொடங்கி கொஞ்ச நாளிலேயே அரும்புகளில் கூட்டு சேந்தாச்சா?

    கலக்குங்க நிஜமா நல்லவன்.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அடுத்த பாகமும் போட்டாச்சு.
    http://www.9-west.blogspot.com/

    பதிலளிநீக்கு
  7. வாங்க தமிழ் பிரியன்.
    தவற்றை சுட்டி காட்டியமைக்கு நன்றி.
    இப்பாடல்கள் அனைத்தும் தமிழம் அறக்கட்டளை நடத்திய பா எழுதும் போட்டிக்கு வந்தவை. அவர்கள் பாடல்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தார்கள். பாடல்களும் நன்றாக இருந்ததால் இங்கு பதிவிட்டேன்.

    //பொரிதாய்க் கற்றல் நம்கடனே//

    திருத்தப்பட்டு விட்டது.


    //ங ப்போல் உறவைக் காக்கணும்//

    //முட்டை யிடும் கோழி
    குள்ள மான கோழி//


    மேற்கண்ட இரண்டும் அவர்கள் எழுதியதே இப்படித்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்! நான் குமரன். மலேசியத் தமிழன். ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். தங்கல் தமிழ்ச் சேவை மனமகிழ்வளிக்கிறது. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு

netoops blog